Posts

Showing posts from May, 2022

மே'ம்

மே மாதம் எனை ஒன்றும் செய்யாது அநாதைகளை மே மாதம் ஒன்றும் செய்யாது குழந்தைகளை ஒன்றுமே செய்யாது அநாதைகள் வளர்ந்த குழந்தைகள் சித்திரையில் பிறந்து வைகாசியில் இறந்தவள் என் அம்மா மே மாதம் என் அம்மா மாதம் அம்மா எனை ஒன்றும் செய்ய மாட்டாள் மே மாதம் என் அம்மா அம்மாவின் உக்கிரம் என்னை சுட்டதே கிடையாது என் மனைவிக்கு மே மாதம் கிலி மாதம் மாமியார் கொடுமையை பார்த்தீர்களா?  அம்மா நீ செய்வது சரியில்லை என்ற முறையீட்டிற்கு பின்பு தான் பருவ மழை முந்துவது எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது 'மே' பற்றிய கவிதையில் மனைவி நுழைந்த முதலே  பொட்டு பொட்டாக வியர்க்க ஆரம்பித்து விட்டது கவிதை அம்மே என் கவிதையை ஒன்றும் செய்யாதே!  அவளை விடுவித்துவிடுகிறேன்.  பதிலுக்கு வதங்கிய சில உறவுகளை துளிர்க்கவை. அந்தியில் சந்திப்போம். பய்! டடா!

கரடி

குளிரிலும் வெயிலிலும் எனைக்காக்கும் என் மயிரே!. 🙏🙏. உள்ளங்கையை மட்டும் விட்டு வைத்திருக்கும் செல்லமே. மேலுதட்டில் உன் வருகைக்காக காத்திருந்த காலங்களை நினைத்து கொள்கிறேன். தலையில் இருந்து தற்போது உதிரத்தொடங்கியிருக்கிறாய். நீ தாடியில் நரைக்க ஆரம்பித்து வருடங்கள் ஆகிவிட்டது. வளர்ந்த நெஞ்சு முடியையும் தாடியையும் முடித்து விட்டு பார்ப்பது சிறு விளையாட்டு. டீ சர்ட்டுகளை மீறும் முதுகு முடிகளை வெடுக்கென்று பிய்த்து உஃப்பென்று ஊதுவேன். அந்தரங்க முடியின் அரசியல் குறித்து ஏற்கனவே ஒரு வெற்றி கவிதை எழுதியிருக்கிறேன். என் மனைவிக்கு என் உடல் முடி பிடிக்காது. என் காதலிக்கு என் உடல் முடி தெரியாது. அப்படியும் ஒரு கதிர் காதல் காலமிருந்தது. ஆற்றாமையால் வெளிப்படும் கொட்டாவியை விழுங்குகிறேன். ஓயாத மனக்கவலைக்கு சான்றாக கண்களில் இருந்து மூக்கு வரை நீளும் கண்ணீர்த் தடங்கள். பெரு மூச்சுகள். புதிய நண்பர்களிடம் பெற்ற நற்சான்றிதழ்களின் குவியலில் விழுந்து புரளும் பழக்கமுண்டு. நகரத்து பாலங்களில் தேன் எடுக்க கூடியவன். கைவிரல்கள் பதியும் படி அறை விடும் வலு. எலும்புகள் நொறுங்க கட்டியனைப்பவன். செம்மறியின் வாடை கொண்

தயை

முழு ஆண்டு விடுமுறையை தடுக்க பார்க்கிறது அம்மாவின் ஓயாத முனகல் மெல்லிய கையுறைகளை முதன்முதலில் பார்க்கிறேன்  'கையுறையுடன் தாதி' நான் வரைய போகும் எண்ணெய்  ஓவியத்தின் பெயர் தாதிகளின் முலைகள் புட்டங்கள் என்று நூற்றுக்கணக்கான ஓவியங்கள் பின்தொடரும் நாளங்களில் புகுந்து இரத்த அணுக்களை ஏமாற்றிய ஊசிகளின் கதைகளை கேரள தாதிகள் எனக்கு சொல்லியிருக்கிறார்கள் உடைந்த பாறைத்துகள்கள் திடீரென  நீரை உருஞ்சியது போல மலத்துண்டுகள் வெல்டன் சேச்சி  எனக்கு விடுமுறை கிட்டியது நாசித்துவாரங்களில்  நிரந்தர குடல் மணம் கிளம்பும் முன் நான் தேர்ந்தெடுத்த  சொற்கற்கள் அம்மாவின் நெத்தியை பதம் பார்த்திருக்க வேண்டும் இதயம் கசிந்தது என பின் ஒரு கனவில் வந்து சொன்னாள் வசதியாக அமர்ந்து ஆடை மாற்றும் உடல்களை வேடிக்கை பார்ப்பது போல ஜன்னல் இருக்கையில் இருந்து விடியலை காண்கிறேன்  கருப்பு அடர் நீலத்தை ஒரு வெளிர் மஞ்சள் கீற்று குறுக்கிடும் போது  அம்மா இறந்துவிட்டாள் என்று உறுதி கொண்டேன் வானம் விடிவதை என்னால் எழுத முடியும் பிறகு நான் என் விடுமுறைக்கான  பரதீஸை அடைந்தேன்  தாத்தா.. என்று ஓடிச்சென்று  செய்தி அறிவித்து அழைத்து வந்தேன்