Posts

Showing posts from April, 2022

ராயபுரம்

இரயில் பாலத்தின் நெற்றி மதிய உணவு நடக்கும் துணை மின் நிலையத்தினுள்  வாசலில் காத்திருக்கிறது சந்தனக்கருப்புவெள்ளை பூனை ஓராள் உதவியுடன் உள்ளே நடந்து செல்கிறது ஏணி  இரும்பு கதவை திறம்பட தாழிடும் காக்கி சொக்கா ஊழியன் அவன் கண்ணின் புடைத்த நரம்புகள் இது ஒரு நகர நிலக்காட்சி கவனமாக என் கண்கொண்டு பாருங்கள் பாலத்தின் நெஞ்சம் நட்ட நடுவில் நிற்கும் காவலர் கூண்டின் அடியில் அமரச் செய்து  தன் குட்டி குடும்பத்துக்குக்கு ஆரத்தி எடுக்கும் மனிதனின் காட்சி பாலத்தின் புட்டம் கூட்ஸ் வண்டியே சோம்பேறி கூட்ஸ் வண்டியே எப்போதும் அண்ண ஓட்டம் தானா?  உன் கோச்சுகளில் என் பாட்டனின் முதுகெலும்பை சுமந்து சென்றாய் என் தம்பியின் புஜங்களை சுமந்து சென்றாய்  தற்போது லாலுவின் முறிந்த கணுக்கால்கள் மலைபோல் குவிந்து கொண்டிருக்கிறது கடைசி விசாரணை உண்மையாகவா, நீ எந்த ஊர்? உன் சொந்த ஊர்? பாட்டனெனில், உன் பாட்டனா?  உன் ரத்த சொந்தமா?  அதெல்லாம் தெரியாது நான் அட்டைக்கருப்பாக இருக்கிறேன் ஆதலின் அவரின் பேரன் நான். * வால்டாக்ஸ் சாலையின் நினைவுகளை இழந்து கொண்டிருக்கும் டாடி காளிதாசருக்கும் அவரின் பேரப்பிள்ளைகளுக்கும் 

பிள்ளைப்பாட்டு

அழுகல் பதத்தில் இருந்த நாள் அப்படி முடிந்து போகும் நாட்கள் தான் வழமை அப்படியான நாளை மீட்டு கொடுத்தது குட்டி பையனின் வெள்ளை சட்டை  வெள்ளை சட்டை ஊழல் சட்டை பையன் சட்டை வெள்ளை சட்டை அப்பா சட்டை ஊழல் சட்டை பையன் சட்டை அப்பா சட்டை அப்பா சட்டையில் பணமில்லை பையன் சட்டையில் பணமுண்டு மூன்று நான்கு ஐந்து காசுகள்  தெளிவான திட்டமொன்று இருக்கிறது 'ஒரு கருப்பு புல்லட் ஒரு தங்க செயின் ஒரு ஜெம்ஸ் மிட்டாய் காலையில் அப்படியே போய் வாங்கிட்டு வந்துரலாம், என்ன சொல்ற குண்டு, என்ன சொல்ற?'

முழு இரவு சார்ஜ் ஏறும் போன்கள்

தன் கனத்தை உணர்ந்து பறக்கும்  பழுத்த இலையை போல கரைப்பரப்பில் பறந்து கொண்டிருக்கிறேன் வளவன் என்று பெயரிடப்பட்ட குட்டி போர்க்கப்பலின் பிளாஸ்டிக் பீரங்கிகளை  பார்வையிடுகிறேன் நாம் கைவிடப்பட்டுவிட்டோம் என்று உணரும் போது ஒரு இலவச ஓல்  கிடைத்து விடுகிறது திடீரென மணலில் தோன்றிய குடிசையில் பொசிசன் பார்த்து நகர்ந்து நகர்ந்து தயாராகியபடி அவ்வுடலின் அடிவயிற்றில்  விரலால் நீவ தமிழெத்துருக்கள்  தோன்றி மறைகின்றன பழுத்த இலை கனமானது  தன் கனம் உணர்ந்தது அதனாலே பறக்கிறது

ஆசிரியனை இடமாற்றல்

எவர்சில்வரின் நிறத்தை பெற்று உருண்டு எழும் நீர்குண்டுகள் தும்மலில் மிரண்டு ஆவியாகின புதிதாக இரைத்தேடும் நடுத்தரமான புறாகுஞ்சு முன்னிலையில் மலையளவான தாணிய பருக்கு  குஞ்சுபுறா கொரிக்கும் வேகத்தை பார்த்தால்  நகரத்து தலைகளை எச்சத்தால் நிறைத்து விடும் சாத்தியம் தெரிகிறது ஒன்றுக்கொன்று தொடர்பிலா இந்த சொற்களுக்கு இடையே  என் ஆசிரியனை இடம் மாற்றிவிட்டேன்

100% வயதை நம்பும் கவிஞன்

மீண்டும் எதுவும் துளிர்க்கும் சாத்தியமற்று இருக்கிறது ஒரு வழுக்கை நிலம் நகரத்தின் இரவுகளில் நித்தமும் உன் குடலை  நிமிட்டுவது மண்புழு தான் உன் வீடு திரும்பு  குட்டி பையா, துரு நிரம்பிய களக்கொட்டை கையிலெடு ஒன் சிறுநீருக்கும் சக்தி உண்டு மினுக்கும் பேன் குஞ்சுகள் போல இருக்கும் கீரை விதைகளை  உன் வயதை நம்பி தூவு

கடமைகளை முடித்து திரும்பிய சாகச மனிதன்

உயர்த்திய முஷ்டியோடு காற்றில் விரைத்த கேசத்துடன் கடமைகளை முடித்து திரும்பிய சாகச மனிதன்  ஓரிரு நாட்களின் களைப்பை நீண்ட கொட்டாவியாக பிறர்க்கு பரிசளிக்கிறான் அப்போதிலிருந்து உறங்க ஆரம்பிக்கிறது  உலகம்  இடமில்லாத அஃறினைகள் வாகனங்களின் மேலிடத்தில் மெத்தை அமைத்து கொள்கின்றன குறட்டையொலிகள் மட்டுமே சாகித்யமாகின விழிப்புணர்வுடன் இருக்குமொரு பதின்பருவ எலி  ஒலிகளை சீரமைக்கும் வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்கிறது கொசுப்பூச்சிகளை விழுங்கி கொண்டு உலகம் நிம்மதியாக உறங்க ஒருவர் வேலை செய்தாக வேண்டுமல்லவா அது எப்போதும் ஒன்றிரண்டு பல்லியாகவல்லவா   இருக்கிறது எறும்பு ஈசல் தட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்டுக்கிளி பொன்வண்டு  குண்டு தவக்களை இவர்களணைவரும் தூக்கத்தின்  துணை பாடகர்கள்  ஓவர் டைம் படி வாங்குபவர்கள் க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர் க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர் க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர் க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர்

தடை செய்யப்பட்ட பகுதிக்கு இமை வண்டிக்களை பறக்க விடுவது

தடை செய்யப்பட்ட பகுதிக்கு கண் ட்ரோன்களை பறக்க விடுவது வேம்பின் பச்சைகளுக்கு நடுவே ஒரு கிளியை கண்டுகொண்டது முதல் ஜோடி கண்கள்  பிற கண்கள் தங்கள் காதுகளால்  ஒரு கிளி இருப்பதை உறுதி செய்து கொண்டு முன்னேறின முதல் கண்கள் செய்கையால் கூடுதல் தகவல்களை அளித்தது சிமிட்டல்களால் தலை அசைத்தன பிற கண்கள் பிளாக் ஐஸ் பட்டாலியன்களின் வச்ச குறி என்றுமே தப்பாது கீ கீ கீ என்ற சப்தம் வரும் திசை நோக்கி வேம்பு காட்டில் முன்னேறி பறந்தது கண்கள் படை  ச்ச்ஷுஷுஷுஷு என தொடர் சத்தம் கீ கீ கீ சத்தம் அடங்கிவிட்டது புகை மண்டலம் கரையும் முன்பே கண்கள் பறந்து கலைந்து விட்டன வெற்றி களிப்பில் இருந்த படைப்பிரிவினரிடையே கவிக்கண் ஓன்று அழுது புலம்பியது உங்கள் ஒருவருக்கும் கிளியின் நிறம் தெரியாது உங்கள் ஒருவருக்கும் அதன் சிறகின் நீளம் தெரியாது அதன் கருணையுள்ளம் தெரியவே தெரியாது அதன் மனித நாக்கு பற்றி தெரியவே தெரியாது திருடன் திருடன் என்று கத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் 

முதுகெலும்பின் நெகிழ்ச்சி

பாதி திறந்திருக்கும் அலமாரியை  மறுபடி பார்த்துக்கொண்டிருக்கிறது  முதுகெலும்பு  அதன் உழைப்பின் சன்மானம் அடுக்குகளில் உள்ளடுக்குகளில் வரிசையாக அமர்ந்திருக்கின்றன  டிகிரி செர்ட்டிபிகேட் மார்க் ஷீட்டுகள் கணிணி படிப்புக்கான சான்றுகள்  குறிப்பாக தட்டச்சு சான்றிதழை நினைத்து நெகிழ்ந்து கொள்கிறது  கடைசி அடுக்கில் கட்டைப்பையில் அமிழ்ந்திருக்கும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளைக் குறித்து மீண்டும் நெகிழ்ந்து கொள்கிறது நடுவிலுள்ள மனைவியின் அடுக்கில் வெகு காலமாயுள்ள மஞ்சள் நிற டர்க்கி துண்டை எடுத்து ஒரு உதறு உதறி மடித்து வைக்கிறது உள்ளடுக்கிலிருக்கும் நகைக்கடன் ரசீதுகளின் முனையை எட்டப்பிடித்து ஒரு சுண்டு சுண்டுகிறது செருமிக்கொண்டே முதல் அடுக்கிலிருக்கும் பிடித்த தொகுப்புகளை   எண்ணி மீண்டும் மீண்டும் நெகிழ்ந்து கொள்கிறது இனி கிழிந்த உள்ளாடைகளுக்கு இங்கு இடமில்லை எனக்கேட்ட குரலை எண்ணி முதுகெலும்பின் நெகிழ்ச்சியில் சுள்ளென்று சுள்ளென்று  தெறிக்கிறது வலி

ஆசுவாசம் 2.0

கருமாலை கோடை மழை பொதுக்கழிப்பிடத்தை வீட்டுக்கக்கூஸின் வெட்டவெளியின் அன்யோன்யத்துடன் பயன்படுத்தும் இரண்டு சிறுவர்கள் கதவில்லா அறையை ஒருவன் பயன்படுத்த மற்றொருவன் வெளிப்பாதையில் அமர்ந்து கதைகேட்கிறான் பக்கத்து அறையில் இருந்து வரும் வெளிப்பாட்டு சத்தத்தைப் பொருட்படுத்தாது இருக்கிறார்கள் மழைச்சத்தம் நான்கு இரண்டாயிரம் எட்டு ஐநூறு என்று எண்ணும் நோட்டுகளில் பளிச் தன்மை கூடுதலாக இருக்கிறது அலசி எழுந்து வந்து பொதுக்கண்ணாடிக்கு போட்டியிடுகின்றனர் சில பற்கள் உடைந்த பொது சீப்பைக்கொண்டு கைகளில் வரிப்போடுகிறார்கள் கோடை மழை கருமாலை களிமகனும் எழுந்து வந்து சேர மூத்திர உப்புகளும் காலி வயிறுகளும் சுத்தமான குடல்களும் அதிக வழுவழுப்பான பொம்மை நோட்டுகளும் மழையை பராக்கு பார்த்தன

ஆசுவாசம்

மேல் தொடையின் நமச்சலை அழுத்தி சமன் செய்து விட்டு பாலத்தின் சரிவில் படுக்கையை விரிக்கிறாள் கிறுக்கி காலி பிரதான சாலைகளில் கவட்டைகளை பிளந்தவாறு சாகசம் செய்கின்ற நாய்கள் பெடல்களில் ஏறி நின்று அலைபாய்கிறான் சைக்கிலோட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் கைகளை அகல விரிக்க இருக்கிறான் ஆக்சிஜன் உருளைகளை வரிசையாக அடுக்கி நூறு நாய்களை பிணைத்து  உருட்டி செல்கின்றன பேய்க் குழந்தைகள் புதிய முதல்வரின் வேகத்தில் நாளை மறுநாள் கூவத்தில் படகு ஆம்புலன்ஸ் விடக்கூடும் தொடர் வேலையில் களைத்து திரும்பும் கிறுக்கன் கைலிக்கு மாறுகிறான் கை நிறைய பக்கோடாத்தூள்

பிள்ளை பேச்சு

வீட்டின் மூத்த பெண் உறுப்பினர் அவளை விளிக்கும் முறைமையை தெரிந்தால் என் மண்டலம் வெளிப்படக்கூடும் கோணல் தாடையுடன் சாப்பிட்டு அடுக்கும் எலும்புகளை நாய்க்கு அலசி உணவிடுவோம் 'ஐஸ்வர்யா ராயின் குசு' என்ற பதம்  இப்போதும் நகரில் புதிய வாசல்களை திறக்கிறது  பொதுவில் நாம் கேட்கும்  திடீர் குசுச்சத்திற்கு  சிரிக்கக்கூடாது மகனே  ச்சேரி ச்சேரி

Before funerals

இறுதி சடங்குகளை அறியாத மனதிற்கு வந்துவிட்டேன் டீத்தண்ணிரில்  எஞ்சியத்துகள்களை நீரில் மூழ்கிய கண்ணவராயன் எஸ்டேட்  என நினைத்து கொள்கிறேன்  மரணம் தான் என்னை புகையிலையிடம் கொண்டு சேர்த்தது துர், அகால், இயற்கை என்று மரணம் மூன்று வகைப்படும் Suicide, Accident, Natural Death என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் மரணம் தான் என்னை குடியரங்கின் லயிப்புக்கு பழக்கியது வெள்ளிகளற்ற கரும் இரவை, காலை மணி இரண்டை மரணம் தான் காட்டியது பற்கள் நர நரக்கிறது காய்ந்த புகையிலையின் மனம் நாசியிலாடுகிறது  பழகிய மூளை பாவம் தத்தளிக்கிறது  ஈரலுக்கு சொல்வதற்கும் ஒன்றும் இல்லை  குடல்கள் கைவிரல்களை கிராஸ் செய்து வைத்திருக்கின்றன கொழுப்பு கட்டிகள் நிரம்பிய இந்த உடலை அடித்து இழுத்து சென்று  நிதம் நினைவில் தோன்றும் அந்த ஒத்த வீட்டின் கசாலையில் நிறுத்தி அங்கு குராலின் முன்றாவது ஈனை கையிலேந்தி நிற்கும் குட்டி கெளதமிடம் ஒப்படைக்கிறேன்  இவனுக்கு சுருக்காக காத்திருக்கும் புளியங்கிளைகள் முறித்து விழுகின்றன இவனுடன் வானில் பறந்த கொக்குகள்  பறத்தலை மறந்த கோழிகளாகின்றன செல்வராஜ் சகோதரர்கள் பெருந்தன்மையுடன் புன்னகைக்கிறார்கள் ஓயாத மூக்கு சி

மனதில் புற்றுள்ள மனிதன்

நாள் முழுவதும் விழுங்கிய சொற்கள் கடபுடவென்று வயிற்றில் புரளுகிறது பிரியும் காற்று குமட்டலை கொடுக்கிறது சத்தத்தை கேட்டு சிரிக்கும் சிலர் தோற்றத்தைக் கண்டு கலங்கும் சிலர் காழ்ப்பு உட்பகை என்ற எதுவும் இல்லை சொல்ல வேண்டிய சொற்கள் அதை நாக்கினால் வெளியேற்றாமல் இவ்வளவு சங்கடம் நெடிய வருத்தம் இல்லை பொச்செரிச்சல் இல்லை முகத்தில் பருக்கள் தோன்றிய போது தோன்றிய போட்டி அது ஒன்னைவிட ஒரு படி மேலே இருப்பது எல்போ செய்து முன் செல்லுதல் அந்த கெட்ட மதி, சிறு மதியல்ல வேறு என்ன அது அது வன்மம் அல்ல கொலை செய்தால் வடிந்து விடும் வன்மம் ஒரு பஞ்ச் ஒரு ஸ்டாப் ஒரு கிக்  இது இது வேறு  ஆம் அது புற்றெண்ணம் ஒரு வேளை கு சிவராமனிடம் மருந்து இருக்கலாம்.  

திருடிய பொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆகும் நாட்கள்

பீரோ பின்புறம் பரணடுக்கு  அரிசி அண்டா நம் மூளை திருடு கொடுத்தவனின் சாமர்த்தியமின்மையால்  மறுதிருடு நடந்து விடலாம் ஒழித்து வைத்த இடம் மாற்றி வைக்கப்படலாம்   எரித்து இல்லாமலாக்கி விடலாம் சந்தேகம் உருபெறும் காலத்தில் நீங்களும் உங்கள் சகபாடியும் ஒருவர் குரல்வளையை மற்றவர் நெருக்கி பிடித்த வண்ணம் நெடுநேரம் நின்றிருக்க வேண்டும் அல்லது மெழுகுவர்த்தியில் விளையாடிய படியே ஒரு ஜவுத்தாளை உருக்கி மேல்பாதத்தில் ஊற்றியிருக்க வேண்டும் அல்லது நேரம் பார்த்து கால் விரல்களை அரைச் செங்கலால் நைத்திருக்க வேண்டும் அல்லது  அல்லது அல்லது அல்லது இல்லாதது தமிழ் கவிதைக்கு நல்லது அல்லது அகால விபத்தில் மரணமடைய விறுக்கும் ஒருவனின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கலாம் அல்லது அவனது முச்சுழியை தொடர் புருவத்தை புசுப்புசுவென்று அரும்ப ஆரம்பித்திருக்கும் மீசையைக் குறித்து பேசியிருக்கலாம் அல்லது காத்திருக்கும் இருண்மையை அதன் நெற்றியில் முட்டி வீழ்த்தியிருக்கலாம்

நீங்கள் பிரமிளோட கல்லறைக்கு போயிருக்கீங்களா

தெரிந்தவரை தேடுகிறது கண்கள் அவரது முதல் தொகுப்பின் பெயரைச்சொல்லி நாம் சந்தோசம் கொள்ளலாம் அவர் கடுப்படையலாம் அவர் பரிந்துரை உங்களுக்கு தெய்வ வாக்கு கோபி என்றால் டேபிள் டென்னிஸ் லட்சுமி என்றால் உடனே வீரலட்சுமி வெள்ளைப்பல்லி விவகாரம் என     வாக்கியத்தை முடிக்க வேண்டும்  இடையில் நாங்கள் கோபியை மிரட்டினோம் என்று              எம் டி எம்மை சொருக வேண்டும் உன்னத சங்கீதம் ப்ரெஸ்சில் இருக்கிறது சாரு மட்டும் சும்மாவா ஏங்க நீங்க மகாமுனி வாசிச்சிறுக்கீங்களா  எனக்கு அப்பாவின் குகையில் இருக்கிறேன் தான்ங்க கடவு கடவ மறந்துட்டீங்க கமலாலயன்னு ஒரு தோழர் குருவினு ஒரு கதை   ‘தந்தைக்காக’ டைப் அசோகமித்ரன லைட்டா தட்டிட்டு போயிடுவாரு ஊமங்காடையன தெரியுமா பாக்குறீங்களா நீங்க மயில் ராவணன் ஆகாசமாடனல்லாம்.. பாவம் குக்கிராமத்துல வராங்க என்ன பன்றது நல்ல கேரக்டர் ஆனா குடி காலி பண்ணிருச்சு உட் யூ லைக் டு ஈட் ஃப்ரூட்  அவரு வம்பு படுக்கையோ மெத்தையோ அது வேணாங்க நீங்கள் குற்றத்தின் நறுமணத்தை அக்குளில் அடித்து கொண்டு  தப்பியோடும் ரஸ்கோல்நிக்கோவை விரட்டிப்பிடியுங்கள் ஏன்பா அவ்வளவு புடிக்குமா? ஒரு வரி மனசுல இருந்து சொல்லு.. 😠