கடமைகளை முடித்து திரும்பிய சாகச மனிதன்
உயர்த்திய முஷ்டியோடு காற்றில் விரைத்த கேசத்துடன் கடமைகளை முடித்து திரும்பிய சாகச மனிதன்
ஓரிரு நாட்களின் களைப்பை நீண்ட கொட்டாவியாக பிறர்க்கு பரிசளிக்கிறான்
அப்போதிலிருந்து உறங்க ஆரம்பிக்கிறது உலகம்
இடமில்லாத அஃறினைகள் வாகனங்களின் மேலிடத்தில் மெத்தை அமைத்து கொள்கின்றன
குறட்டையொலிகள் மட்டுமே சாகித்யமாகின
விழிப்புணர்வுடன் இருக்குமொரு பதின்பருவ எலி
ஒலிகளை சீரமைக்கும் வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்கிறது
கொசுப்பூச்சிகளை விழுங்கி கொண்டு
உலகம் நிம்மதியாக உறங்க ஒருவர் வேலை செய்தாக வேண்டுமல்லவா
அது எப்போதும் ஒன்றிரண்டு பல்லியாகவல்லவா இருக்கிறது
எறும்பு ஈசல் தட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
வெட்டுக்கிளி பொன்வண்டு
குண்டு தவக்களை
இவர்களணைவரும் தூக்கத்தின்
துணை பாடகர்கள்
ஓவர் டைம் படி வாங்குபவர்கள்
க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர் க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர்
க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர் க்கக்கர்ர்ரர் ப்ரர்ர்ர்
Comments
Post a Comment