ஜென்ம தினம்
பனிரெண்டு வயதின் தொந்தியை
யாருமே குறைசொன்னதில்லை
ஆயத்தங்களே இல்லாமல்
போரில் வென்ற நாட்களவை
இரண்டொரு வருடங்களுக்கு ஒருமுறை
தோன்றும் வழிப்போக்கன்
சோம்பலில் திளைத்த காலங்களை
நினைவுப்படுத்தி செல்கிறான்
திடீரென தோன்றி
லட்சிய ஜோடனைகளை
பகிர்ந்து கொண்டு செல்வதவன் வழக்கம்
அவன் இழந்த சொந்தங்களின் வயதைச்
சொல்லி நெகிழ்த்துவான்
ஒவ்வொருமுறையும்
அவனிடம் விடைபெறும் போதும்
அப்பாடா தப்பித்தோம் என்ற உணர்வு
தோன்றி மறைகிறது
நாம் வயதை மிச்சம் வைத்திருக்கிறோம்
இன்னும் கொஞ்ச தூரம் தான்
நாம் ராபர்ட் ப்ராஸ்டின்
பெரிய பாதையில்
சென்று கொண்டிருக்கிறோம்
வெகு சிலரே தேர்ந்த பாதையிது
இந்த பாதையில் குடித்து விட்டு
வண்டி ஓட்டலாம்
தினசரி முகச்சவரம்
செய்ய வேண்டியதில்லை
பகற்கனவுகளின் குறட்டையை
யாரும் கேலி செய்யமாட்டார்கள்
எந்தவொன்றையும்
திருப்தி படுத்த வேண்டாம்
நிதானமாக முதுகு பருக்களை
நோண்டி கொண்டிருக்கலாம்
கைசூட்டில் இருந்து புறாவை
பறக்க விட வேண்டாம்
ஆனால்
நம் வியர்வையின் வீரியம் குறித்த சந்தேகத்தை விரட்டியபடி நடந்து கொண்டே இருக்க வேண்டும்
சந்தித்தவர்களின் சாயலேறி கொண்டே வருவதை சுமக்க வேண்டும்
மறைந்து கொண்டே வரும் நம் நிழலை காப்பாற்ற வேண்டும்
ஓயாமல் ஒலிக்கும் மனக்குரலை காற்றின் ஒலியலைகளோடு கலக்க வேண்டும்
நடந்தும் ஓடியும் குறையாமல்
பெருத்து இறங்கியுள்ள தொந்தியை
நிந்திக்க கூடாது
த்ளப் என்று சத்தம் வருமாறு
கொஞ்சினால் நல்லது
ஆனால்
யாராவது நம்மை நினைத்து
கொள்ள வேண்டுமே
என் சிறிய தொப்பையை தெரிந்த ஒரு
குரல் வேண்டுமே
உடையாத என் சின்ன குரலை கேட்க வேண்டும் என்று எனக்கே தோன்றுவதில்லையா
வாய் ஜாலங்களை பகிர்ந்து கொண்ட வழிப்போக்கனே கேளாய்
என் முகம் பார்த்து மலர்ச்சியடைய
தெரு நாய் ஒன்றுண்டு சுழல் பாதையில் சுத்தும் போது கண்ட உண்மையது
வீட்டில் வளர்க்கப்பட்டு பின்பு
அநாதையானவர்கள் நாங்கள்
அதனிடம் சொல்வேன்
சுப்பு இன்றெனக்கு பிறந்த நாள்
அது போதாமல் மீண்டும் சொல்லுவேன்
அம்மா இன்றெனக்கு பிறந்த நாள்
பஷீர் இன்றெனக்கு பிறந்த நாள்
Comments
Post a Comment