அறியாமையின் சொற்கள்
ஒரு முறை நிகழ்ந்த விஷயங்கள் பரவசமளிப்பவை
அது உப்பு கார சுவையை நினைவில் இருத்தாது
தொடரும் பரவசம் முட்டாள்தன்மையை அணுகும்
பரவசம் நீடித்து அறியாமையைத் தரும்
அறியாமைக்குள் நுழைந்துக்கொண்டால்
எல்லாம் ஆனந்த பரவசமே!
பாதி தொடங்கிய வரிகளை முடிக்கும்
தைரியம் வந்து விடும்
வேலைகள் நடக்கும்
விளக்கணைத்தவுடன் விழித்துக்கொள்ளும்
விடலைச்சிறுவனைப்போல
உள்ளமும் அடிவயிறும் சூடேறும்
நடுக்கத்தோடு உடல் செருமிக்கொண்டோடும்
வேலைகள் நடக்கும்
தொடரசை போடும் பழக்கம்
கைவிட்டோடும்
காரியகர்த்தர்களை முட்டாள்
என்றழைக்க முடியுமா
டிமோனை முட்டாள் எனலாமா
வேலை நடக்கிறது
ஆட்கள் தேவை
முட்டாட்கள் தேவை
முட்டாள் + ஆட்கள் - முட்டாட்கள்
‘நல்லவையெல்லாம் இரவில் தான் நடக்கும்
காலை மதியமெல்லாம் உயிருடன் இருத்தலே பெரிய விஷயம்’
இப்படி ஒரு வரி இதை எழுதியது யார் என்ற குழப்பம்
கூகுளில் ஏதும் கிடைக்கவில்லை
என் சொற்கள் அவை
‘எனக்கான கடிகாரம் மணல் நிரம்பிய ஒரு கடிகை’
என்றொரு குறிப்பு
மேலும்
‘பிரசவ பெண்ணின் உதய சூரியக்கால்கள்
வீங்கிய குன்று வெளிமுட்டும் தலை’
இவற்றை சரி பார்க்க வேண்டியதில்லை
இவையென் சொற்கள்
“பொதுவெளி என்பது ஒரு நடிப்பு” பிரேம் எங்கோயோ சொன்னது
கவனமாக பாவணை செய்யுங்கள் என்றார் மணிவண்ணன்
வாயைப் பொளக்காதே என்பார் ஹரி
முடிஞ்சா தலைய கொடுங்க என்பார் கருப்பு
இண்டலெக்சுவல் ஜொள்ளு என்று புரிய வைத்தார் ஷங்கர்
காலம் நிர்தாட்சன்யமற்றது என்றிருக்கிறார் கிழவன் அசோகமித்திரன்
வெகு சிலர், வெகு சிலரே எஞ்சுவார்கள் என்று தொடரும் சபரி
காலம் கால் குவித்து சுளகை வீசிப்பொறுக்கும் காட்சி தொடர்கிறது
கவிதையில் வெளிப்படும் அண்ணனைத் தேடும் சிறுவனே
Minor Poet என்பவன் யார்?
சின்ன கவியா
கவிதையெழுதும் மைனரா
இரண்டாந்தர கவிஞனா
அவன் சக கவி முக்கிய கவிஞன்
தைரிய எழுத்தைக் கனவுக்காண்பவன்
மகாகவிகளைக் கண்டு கொள்பவன்
பெரிய கவிதைகளை மனனம் செய்பவன்
சின்ன கவிதைகளை வாஞ்சையுடன் நோக்குபவன்
அறியாமையின் சொற்களை முழு மனதாக உதிர்ப்பவன்.
Comments
Post a Comment