கவிதையின் முதற்பயன்

பெயர் சொல்லி அழைக்கும் 

அம்மகளை முத்தமிடு இடையை 

வளைத்து கொள் 

என்னை விட்டுச் செல்லாதே 

என்னுடன் இரு

நினைவில் மென்அதிர்வு செய்வோம்

தோள்களை எனக்கேதும் தெரியாது 

என்பது போல் செய்து கொண்டே

தலையை ஆட்டிக்கொள்வோம்


வெண்டை பெண் அவள்

அலட்சிய அசைவு கொண்டவள்

வெண்டைப்பூ போன்ற புதிய மார்புகள்

சோம்பல் முகம் 

நெடிய நாசி

செம்பட்டை கேசம்


போ. 


சென்று அவள் மூக்கை உரசு படர்ந்திருக்கும் குட்டிகுட்டிபுள்ளிகளை பார்

அதன் நட்சத்திர இருப்பை

காதில் சொல்.


கெஞ்ச வேண்டாம் 

கால் விரல்களை தொடாதே

புஜங்களை காட்டாதே

ஒன்றுமில்லை என்று சொல்

வரிகளின் உண்மையை போட்டு உடை

தேவைப்பட்டால் அழைக்கலாம்

என்று சொல்.

ஓடி வந்துவிடு

திரும்பி பார்க்கும் பழக்க முண்டா?


பயப்படாதே

உன் இஷ்டம் போல செய்

வரிகளில் ஏக்கம் தெரிகிறதா

ஏக்கம் மற்றும் அவர்களின் சகோதரர்களை

வழியில் இறக்கி விட்டுச்செல்

எருமைகளுடன் நதியில் புரண்டெழுந்து 

காய்ந்த கருஞ்சேற்றுடன் 

புறநகரை உலா வரட்டும்


துணிவை தரும் 

பொய்களையெடுத்துச் செல்

பத்தாண்டுகளுக்கு பிறகு

மனதில் காதலை சுமக்க வைத்திருக்காள்

சுட்டிப்பெண் குரலில் பெரிய பெண்

விடலை பையன்களின் 

தூக்கத்தைக் கெடுத்தவள் 

சேகரத்தில் இருந்து கூரிய

அன்பை எடுத்து செல்

மறக்காதே

அப்பூஞ்சையன்பின் ஊசல் வாடையை 

நீக்கி எடுத்து செல்


அன்பால் நீ சாதித்தது என்ன

உன் பெருந்தன்மையால்

சாதித்தது என்ன

தியாகவுணர்வால் இழந்தது எவ்வளவு

பயத்தால் எத்தனை மனதை 

எத்தனையெத்தனை முலைகளை

பறிகொடுத்தாய்

விளங்கா முண்டமே

வேகமாய் செல்

அவள் தலையுச்சியை பிடித்துக்கொள்

நாடு வரையும் கொம்பேடுத்து

இருவரையும் சேர்த்து வரைந்துகொள்

சிறைபிடி பேச்சுக்கொடு

பீடியின் சாம்பல் குறித்து

மதுவின் அடர்நிறம் குறித்து


அவள் அதிகாரப்பூர்வ திருமண வயதைக்

கடந்தவள் மேலும் உனக்கு நபக்கோவ் வயதும் அல்ல

ஏசுவின் வயதும் இல்லை

புத்தனாகும் முயற்சியிலும் தோல்வி

நீ வணிகம் செய்யும் ஒருவன்

பயகம்பருக்கு முந்தைய நிலை

பெண்களால் தொந்தரவு உண்டு

பயப்படாதே பல் வரிசையும் கண்களும்

ரம்மியமானவை ஒன்றும் செய்யாது

ஓடிப்போ முண்டமே சனியனே

ஏதாவது செய் மறுஅன்பை பெரு

மக்கு கவிதையே

ஏதாவது செய்

என்னால் முடியாத 

ஏதாவதொன்றை செய்

பெறு. வாங்கு. கொடுக்காதே

பசியென்று சொல்

வாயை அடிவயிரையும் 

காட்டி பிச்சையெடு

அல்லது மேல் அண்ணம் போன்று உன்னோடு உன் வாயில் என்றும் இருப்பேன் என்று சொல்

உன் குண்டிக்கருப்பாக வாழ்ந்து சாவேன் என்றுரை

அல்லது இப்படி தொடங்கு

ஒருவனால் முடியாததை எப்படி

அவன் கவிதையை செய்ய சொல்லலாம்?

Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி