கோடை கொண்டு வரும் மாற்றம்

சித்ரவேலு இந்த கோடையில் மாறிவிட்டான் 

மேல் ஈறு தெரியும்படி எப்போதும் லப்பர் வாயை திறந்தே வைத்திருப்பவன்

இந்த கோடையில் வாயை மூடிக்கொண்டான்

மாட்டுப்பல் போன்ற தன் பற்களை இந்த கோடையில் மறைத்து கொண்டான்

சித்ரவேலு எப்போதும் பேசிக்கொண்டே இருப்பான்

கண்ணச்சதை ஆடும் பொய்க்கோளி

புடுக்கு அவன் அறிமுகப்படுத்திய சொல்தான்

அதன் பிறகு என்னை அழைத்து 

புடுக்கறுத்துருவேன் என்று சொல்லச்சொல்லி அழகு பார்த்தான்

இதுதான் புடுக்கு இங்க பாரு என்று ஊரணி உள்ளிருந்து எம்பி எம்பி குதிப்பான்

சித்ரவேலு இந்த கோடையில் மாறிவிட்டான்

சித்ரவேலு வாயை மூடிக்கொண்டான்

சித்ரவேலு பேண்ட் போட்டுக்கொண்டான்

வேட்டிக்கட்டுகிறான்

மேல் துண்டு போடுகிறான்

அப்புறம் சித்ரவேலுக்கு ஏர் நெத்தி

விழுந்து கொண்டிருக்கிறது

தற்போது சித்ரவேலுக்கு புடுக்கு

இருக்கும் இடம் தெரியாமல் கிடக்கிறது

நான் இறந்து போனதும் சித்ரவேலு

பேசுவதை நிறுத்திக்கொண்டான் என்கிறார்கள்

தூண்டில் போட மட்டும் இந்த ஊரணிக்கு

வந்து போகிறானாம் 

மிதக்கும் தட்டை சிமிட்டும் போது

எதையோ நினைத்து நினைத்து

அழுது கொள்கிறானாம்

தலை பாரத்தோடு வரப்புகளில் தனியாக

நடந்து வரும் போது எப்போதும்

கேவல் சத்தம் கேட்கிறதாம்

கோடையைக் கண்டு அஞ்சினான்

கோடையை புடுக்கறுத்துருவேன்

என்று ஏசினான்

கோடை வருடம் தவறாமல்

மீண்டும் மீண்டும் வந்தது

புது புது மாற்றம் தந்து சென்றது.

Comments

Popular posts from this blog

கவிதையின் முதற்பயன்

புறநகரின் நீர்நிலைகளுக்கு