என் காலுக்கு சொல்

மனதையும் மூளையையும்

காலில் அணிந்து செல்கிறேன்

என் கால்களே எனக்கான நல்ல 

முடிவுகளை எடுக்கின்றன

நாக்கும் கைகளும் திராபைகள்

வஞ்சகர்கள் சிற்றின்பகாரர்கள்

சிறுபிள்ளைகள் விளையாட்டுக்காரர்கள்

என்னை தந்தைகளிடம் தஞ்சம் புக வைத்து விடுவார்கள்

நண்பனை விசாரிப்பாளனாக மாற்றிவிடுவார்கள் 

பயனில்லாத பகலையும் பின்மதியத்தையும் உண்டு செய்பவர்கள் 

அந்த இருவர் குறித்து பேசுவது சலிப்பைப் பெருக்குவதாகும் 

கால்கள் இல்லையேல் எனக்கு கெளரவம் இல்லை

தூரத்தில் நான் நடந்து வருவது கண்டு ஓடோடி வந்து வாரி அணைத்து கொண்டனர் மக்கள்

என் பாதங்களை பற்றிக் கொள்கிறேன்

இன்னும் கொஞ்ச காலம் ஈடு கொடு

என்னை இன்னும் பல நீர்நிலைகளுக்கு அழைத்துச்செல்

இன்னும் சில நரகல்களிடம் இருந்து காப்பாற்றி கொடு

இன்னும் சில நண்பர்களிடம் அழைத்துச் செல்

பரத்தையரை கொஞ்சித் தூக்கிச்செல்

கடன் வருகிறார் ஓடு

அம்மா வருகிறாள் ஓடு 

அப்பா வருகிறார் ஓடு

பக்தி வருகிறது ஓடு

பணம் வருகிறார் ஓடு

பண்பைத் தேடி ஓடு

தண்ணீர் தேடி ஓடு

பொறுப்பைத் தேடி ஓடு

சக வெறுப்பைத் தாண்டி ஓடு

பறப்பதற்கு முன்பு ஓட வேண்டாம்

நாம் பறக்கிறோம்

என்று

உன் வலது காலுக்கு சொல்.

Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி