மணிக்கணக்கனின் தொடர் வாசிப்பு

எனை சிறுவன் என்ற அழைத்த காலத்தில்

சரியாக நேரம் சொல்ல உழைத்திருக்கேன்

கம்மலாக இருக்கும் நண்பகலையும் கண்டுபிடித்துவிடுவேன்

நேரத்தை கைவிட முடியவில்லை

நகர்ந்து கொண்டே இருக்கிறது

நொடி முள்ளோசை தானே 

பூமியின் நடைச்சத்தம்

நேரக் குழப்பம் ஏற்பட்டதேயில்லை

யாரிடமும் இப்போது என்ன நேரம் என்று விசாரித்தது இல்லை

என்னிடம் தான் எப்போதுமே 

அனைவரும் நேரம் கேட்பார்கள் 

என் வருகையை கண்டு நேரம் சொன்ன காலங்களும் உண்டு

இங்கிருக்கும் போதே 

அங்கிருக்கும் மனம்

அங்கு செல்லும் போதே 

இறங்கி ஓடி விடும் 

காதுக்குள் முள்ளோசை

திரை விழுந்த கண்கள் 

நான் வேறு யோசனையில் இருக்கிறேன்

எவ்வளவு நேரத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்ற கணக்கில்

இடையில் சில பிழை 

பின் சென்று சரி செய்யும் வேளையிது

நீங்கள் வரிசையில் இருக்கிறீர்கள்

உங்களுக்கு முன்னர் பலர் ஸ்பெஷலாய்

உரைத்தவை கண் முன்னால் நிற்கின்றன

காது சுவர்களில் படிந்திருக்கின்றன

அதை தொடாமல் பேசுங்கள் இப்போது 

ஒரு பெரிய நாவலில் மூழ்கியிருக்கிறேன்

முள்ளோசை கேட்கிறது

நூறு பக்கங்களை தாண்டி விட்டேன்

மொத்த பக்கங்களை எண்ண மாட்டேன்

இன்னொரு நூறு பக்கம் தாண்டி விட்டால்

அடுத்த சிட்டிங்கில் முடித்து விடுவேன்

பசிக்கிறது உறக்கம் வருகிறது

பசியில் வாசிக்கிறேன்

உறக்கத்தில் வாசிக்கிறேன்

என் பழைய வயிறை தெரியுமல்லவா

கழிவறையிலும் வாசிக்கிறேன்

சதா என்னுடன் இருக்கிறது நாவல்

அலுவலகம் முதல் குடும்பச் சடங்குகள் வரை

பல மாவட்டங்களுக்கு பயணிக்கிறது

நாவல் முனை மடங்கியப் பள்ளி புத்தகத்தின் கலையைப்பெறுகிறது

டிக் டிக் டிக் என்ற சத்தத்தோடு

வேறு சில புத்தகங்கள் பையில்

நுழைந்து கொள்கின்றன 

அவை தங்களுக்குள் இந்த

மணிக்கணக்கனின் தொடர் வாசிப்பு

குறித்து கூடி கூடி பேசிக்கொண்டன

நாட்கணக்கில் நசிந்து கிடந்த நாவல் 

சத்தம் போட்டது 

'நம்மள கூப்பிடு வச்சிட்டு

வேறெங்கையோ  

பார்த்துக்கிட்டு இருப்பான்

சுத்த மரியாதை தெரியாத பையன்'.

Comments

Popular posts from this blog

கவிதையின் முதற்பயன்

புறநகரின் நீர்நிலைகளுக்கு

கோடை கொண்டு வரும் மாற்றம்