சமிஞ்ஞை தரும் மஞ்சள்

பச்சை தான் மஞ்சளைக் கொண்டு வருகிறது என்றுரைத்த கற்பூரவள்ளியே
உன் சுனை வெள்ளையை கருந்திட்டுகளை சித்திரத்தில் 
பிடிப்பேன் உன் காம்பின் சுருளை 
அழித்து அழித்து வரைந்து நேர்த்திக்கு முயல்வேன் டசனுக்கு மேல் பழங்களுள்ள
சீப்பில் ஒவ்வொரு பழத்தையும்
வரைய ஒரு ஆண்டு முழுவதையும்
எடுத்துக்கொள்வேன்
'பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக
வரைந்த கற்பூரவள்ளிகள்' என்ற பெயரில்
தன் எதிர்காலத்தை நோக்கும் அப்பழங்கள் தங்களை முழு கருப்பாக்கி
பிராந்தி மனத்தை பரப்பும்


கருப்பை அண்டவிடாத பழங்கள்
வெண்மஞ்சள் நிறத்தில் பார்ப்பவரின்
கண்களுக்குள் மிளிரும்
அவைகளை பார்க்கும் தோறும்
பழைய பசிகளின் நினைவு ஓடிவரும்
அவைகளை நினைவில் 
நிறுத்தினால் பசி பெருகி வழியும்
இரவு பசிக்கான பழமாக
தன்னை அறிவித்துக் கொண்டு
விட்ட கற்பூரவள்ளியே
உனை மட்டுமே நம்பி இருந்த இரவுகளின்
கணக்கைச்சொல்லவா 
நீ பழுக்காமல் போக்கு காட்டியது எத்தனை முன்னிரவுகள்
பின்னிரவிடம் உன் பிடி இளகியது
நீ காயாக இருக்கும் போது உன்னிடம்
யாரும் அண்ட முடியாது
சகித்து உட்கொள்ள முடியாது
மஞ்சளாக சமிஞ்ஞை தருவாய்
அதன் பிறகு தான் யாரும்
உன்னை நெருங்க முடியும்
அரைக்காயாக இருக்கும் வேளையில்
உனை சமாளித்துவிடலாம்
உனை கேளாமல் உன் விருப்பமின்றி ஒரு நாளும் உன் தோளை தொடுவேனா
விடியும் வரை உன் பச்சையில்
ஆழ்ந்து உறங்குவேன்
இடையே எழுந்து விழித்திரையில்
நீர் சுரக்கும் வரை உற்று 
உன் 'தோளை' நோக்குவேன்
மெல்ல விலகும் வெண்சுனை மேல்
விரல்களை படர விட்டு
ஒரு நல்ல கொட்டாவி தரும்
கண்ணீரை கன்னங்களில் 
வழிய விடுவேன்
ஒரு அழுகை தந்த நிதானம் போல
உறங்கி விடுவேன் 
சத்தமில்லா குறட்டையுடன்.

Comments

Popular posts from this blog

கவிதையின் முதற்பயன்

புறநகரின் நீர்நிலைகளுக்கு

கோடை கொண்டு வரும் மாற்றம்